திங்கள், 21 ஜனவரி, 2019

கிறிஸ்துமஸ் தாத்தா வந்த வரலாறு !


  கிறிஸ்துமஸ்  தாத்தா  வந்த  வரலாறு !

*கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் "சாண்டா கிளாஸ்' (SANTA CLAUS) கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம்!*

கிறிஸ்துமஸ் தாத்தா என்றவுடன் எல்லோருக்கும் பருத்த உடல், பனிக்குல்லாய், சிவந்த கன்னக் கதும்புகள், குறும்பு கொப்பளிக்கும் கண்கள், சிகப்புக் கம்பளி ஆடை, தோளிலே ஒரு மூட்டை இவைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

ஆனால் உண்மையில் நிகோலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் கிறிஸ்துமஸ் தாத்தா பாத்திரம் உருவாயிற்று! "டாக்டர் க்ளெமென்ஸி மூர்' என்பவரே இப்பாத்திரத்தை உருவாக்கினார்.

இன்று கம்யூனிஸ்ட் நாடுகள் கூட சாண்டா கிளாஸ் தாத்தாவை அங்கீகரித்து இருக்கின்றன. முதலில் டச்சு மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவை "சின்டி கிளாஸ்' என்றனர். அதில் இருந்து சாண்டா கிளாஸ் என்ற பெயர் வந்தது.

உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயர் செயின்ட் நிகோலஸ்!

அன்பு, நல்லுறவு, தாராள மனம், குழந்தைகளிடம் விருப்பம் ஆகிய நற்குணங்களுக்கு உரியவர் இந்த செயின்ட் நிக்கோலஸ். அவர் தனக்கு உரிய விருந்து நாளன்று (டிசம்பர் - 6 ஆம் நாள்) குழந்தைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வார்.

இன்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சாண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் திருநாளில் பனி வண்டியில் பறந்து வந்து வீடுகளின் புகைப்போக்கி வழியாக இறங்கி வந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நீண்ட வெண்தாடி வைத்த ஒரு குண்டுத் தாத்தா!

சிரியா நாட்டில் சாண்டா கிளாஸ் என்பது பரிசுகள் கொண்டு வரும் ஒரு ஒட்டகம் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். கிறிஸ்து பிறந்த இரவில் ஒட்டகங்களில் வந்த மூன்று அறிஞர்களும் இயேசு பாலகனை வாழ்த்தியபோது அந்த ஒட்டகங்கள் சோர்ந்து மயங்கி விட்டன. அப்போது குழந்தை இயேசு அவைகளை இரட்சித்து புத்துணர்ச்சி வழங்கினாராம்.

இங்கிலாந்தில் சாண்டா கிளாஸ் தாத்தா நீண்ட வெள்ளைத் தாடி, சிவப்புக் கோட்டு, ரெயின்டீர் என்ற கலைமான் இழுத்து வரும் பனிச்சறுக்கு வண்டியான ஸ்லெட்ஜில் பரிசு மூட்டையுடன் பவனி வருவார்.

குழந்தைகள் தங்கள் கட்டிலின் கால்மாட்டில் ஸ்டாக்கின்களைத் தொங்க விட்டிருப்பார்கள். சாண்டா புகைப்போக்கி வழியாக இறங்கி வந்து இதற்குள் பரிசுப் பொருள்களைப் போட்டுவிட்டுப் போவார். இது இங்கிலாந்துக் குழந்தைகளின் நம்பிக்கை.

ஜப்பானியக் குழந்தைகள் சாண்டா கிளாஸ் தாத்தாவை "ஹோட்டியோஷோ' என்பார்கள். இவருக்குப் பின்னாலும் கண்கள் இருக்கும்! இதனால் எல்லாக் காலத்திலும் எல்லாத் திசைகளிலும் எல்லாக் குழந்தைகளையும் அவரால் காண முடியுமாம்!

ஹாலந்து தேசத்துக் குழந்தைகள் சாண்டாவை இழுத்து வரும் "ரெயின் டீர்' கலைமானுக்கு உணவாகக் காரட்டுகளையும் வைக்கோலையும் வைத்து வரவேற்கிறார்கள்.

டென்மார்க் குழந்தைகள் தங்களுக்குப் பரிசு தரும் தாத்தாவின் பசிக்கு ஒரு கிண்ணத்தில் பாலும் ஒரு தட்டில் அரிசி சாதமும் வைத்திருப்பார்களாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக