சனி, 31 டிசம்பர், 2016

சசிகலா பற்றி இது வரை வெளிவராத புதுத்தகவல்கள்

சசிகலா பற்றி  இது வரை வெளிவராத புதுத்தகவல்கள்..

1. சசிகலா 1956 ஆம் ஆண்டு பிறந்தார். அவரின் ஜாதகத்தைக் கணித்தப் பிரபல சோதிடர் அம்பலத்தாடி தீட்சிதப் பெருமாள் "பிற்காலத்தில் ஆட்சிப் பீடத்தில் பெண்ணொருவரை அமர்த்தி, அவரின் மறைவுக்குப் பிறகு உலகாளும் பெருமை பெறுவார்" என்று கணித்து வைத்துள்ளார்.

2.1963 ஆம் ஆண்டு வாக்கில் பள்ளிக்கூடத்தில் சிறுமியாய் இருந்த போது களிமண்ணில் இரண்டு பொம்மைகளை சசிகலா செய்துள்ளார்.அச்சு அசலாய் ஒரு பொம்மை ஜெயலலிதா போன்றே இருந்ததென்று அண்மையில் அப்பள்ளியின் தலைமையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பொம்மை பறக்கும் தட்டின் மேல் நிற்கும் ஆண் பொம்மை. அது எம.ஜி. ஆர் பொம்மையாகும். அந்த ஆண்டில்தான் "கலையரசி" திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

3. அதே பள்ளியில் தேசிய கீதம் பாடுகின்ற போது 'ஜெயஹே' என்பதை 'ஜெயாஹே' என்றுதான் சசிகலா பாடியதாக பள்ளிக்கூடத்தின் குறிப்புகளில் இருக்கின்றது.

4.'வெண்ணிற ஆடை' திரைப்படத்திற்குப் பின்னர் ஜெயலலிதா அடுத்தப் பட வாய்ப்பினை எதிர் நோக்கி அவர் தனது வீட்டில் தங்கியிருந்த போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டிருக்கிறது. ஜெயலலிதா கதவைத் திறந்த போது வெளியே நின்றிருந்த சசிகலா தன்னை யாரென்று சொல்லிக் கொள்ளாமல் "விரைவில் உன்னை வந்து சேர்வேன்,ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடி" என்று கூறிப்போயிருக்கிறார். இதைப் பின்னாளில் ஜெயலலிதாவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் பகிர்ந்துள்ளார்.

5.அதே காலக்கட்டத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்காக பொருத்தமானக் கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்த இயக்குனர் பி.ஆர். பந்துலுவின் காரில் ஜெயலலிதாவின் விலாசத்தை வைத்ததும் சசிகலாதான். இதை பி.ஆர். பந்துலுவே எம.ஜி. ஆருக்கு  எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

6. 1980 ஆம் ஆண்டுவாக்கில் 'வீடியோ' கடையைத் துவங்கிய சசிகலா 'ஜெயலலிதாவின் எதிர்காலம்' என்ற  குறும்படத்தைத் தயாரித்து ஜெயலலிதாவுக்கு மட்டும் கொடுத்துள்ளார். படத்தைப் பார்த்த ஜெயலலிதா "நான் இவ்வளவு பெரிய ஆளாவேனா?" என்று வியந்திருக்கிறார். சசிகலாவைத் தன்னுடனேயே இருக்கும்படி வேண்டிக் கேட்டுள்ளார்.

7.  சசிகலாவின் தெய்வீக ஆற்றலையும், அரசியல் அறிவையும் உளவுத்துறை மூலம் அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை அமெரிக்கா வருமாறும் சர்வதேச அரசியலில் ஈடுபடுமாறும் அழைத்துள்ளார். அதனை மறுத்த சசிகலா ஜெயலலிதாவும் தமிழக மக்களின் நலனுமே முக்கியம் என்று கூறியுள்ளார்.

8. வைத்தீசுவரன் கோயில் ஓலைச்சுவடியில் பின்வரும் சுலோகம் காணப்படுகிறது.

"இருகைத் திறத்தால் இணைவுற்றாங்கு
ஒருமைத்தாய் ஆயிடுவர் ஒன்றுள வொன்றாய்
கருநா டதுவும் கண்டமன் குடியும்
தருஜெய வம்சசிகர மாகுமே"

இந்த சுலோகத்தின் கடைசி இரண்டு வரிகள் சசிகலாவே எல்லாம் என்பதை தெளிவாய் எடுத்துரைக்கின்றது.

(என்ன? தலையைச் சுற்றுகிறதா? இப்படியெல்லாம் கூட தமிழகத்தில் தகவல்கள் வெளியாகலாம். நம்பிவிட நம்மை நாமே தயார்படுத்திக் கொள்வதை விட வேறு வழியில்லை. நம்ப மறுப்பவர்கள் மீது 'அப்பல்லோட்டாய' சாபம் வந்து சேரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக