ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டை உற்று நோக்கியபடியே நீண்ட நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு கண் அழுத்த நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மனித உடலில் கண்கள் மிக உன்னதமானது.. காட்சிகளை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பி அதனை உணர வைக்கின்ற மிக அற்புதமான பாகம்..! அதனை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம்..!
கண்களுக்கு வெளியே அதனை அழகு படுத்துவதற்கு அதீத ஆர்வம் கொள்ளும் நாம் கண்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்பதற்கு கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே உதாரணம்..!
நிமிடத்திற்கு 6 முறை அணிச்சை செயலாக மூடி திறக்கும் இமையின் வேலை என்பது கார் கண்ணாடியை துடைத்து பளிச்சிட வைப்பருக்கு ஒப்பானது.
அந்த இமையின் வேலையை கூட நம்மில் பலர் செய்ய விடுவது இல்லை. அந்த அளவிற்கு செல்போன், டேப்லெட், கம்யூட்டர், டிவி என கண்ணை பாதிக்கும் அதீத செளிச்சம் கொண்ட மின்சாதன பொருட்களை கண்கொட்டாமல் உற்று நோக்கி அதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
அதிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஒரு படிமேல், வீடியோ கேம் விளையாடுவதாக கையில் ஸ்மார்ட் போனை எடுத்து விட்டால் போதும் சுற்றி என்ன நடக்கிறது ? என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. கோடை விடுமுறை என்பதால் கடிவாளம் கட்டிய குதிரை போல தங்களது இரு கண்களின் பார்வை திறனையும் முழுவதுமாக ஸ்மார்ட் போனை கையாளுவதிலேயே கழிக்கின்றனர்...!
சிறுவர்கள் இப்படி என்றால் வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைதள அடிமைகளாக இருக்கின்ற இளைஞர்கள் மற்றும் தங்கள் வேலைக்கு என்று தினமும் கணினியோடு கழிக்கும் பணியாளர்கள் என பலருக்கும் கண்களைப் பற்றி போதிய அக்கறையோ விழிப்புணர்வோ இருப்பதாக தெரியவில்லை..!
குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் தாய்மார்களும் தொலைக்காட்சிகளை பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். தொடர்ந்து இது போன்ற செயல்களை செய்வதால் தற்போது வரை சென்னையில் மட்டும் 10 சதவீதம் பேர் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் ஆனந்தபாபு தெரிவித்துள்ளார்.
கண் அழுத்த நோய் ஏற்பட்டால், ஆரம்பத்தில் தலைவலி ஏற்படும், கண்கள் சிவப்பாகும், கண்ணில் எரிச்சல் உண்டாகும், அப்போது சரி செய்யவில்லை என்றால் பார்வை திறன் மெல்ல குறுகி நேராக உள்ள பொருட்கள் மட்டுமே கண்களுக்கு தெரியும் அப்போதும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ஸ்மார்ட் போனே கதி என்று சுற்றினால் பார்வையை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எப்போதும் கணினியுடன் பணியில் இருப்பவராக இருந்தால் 20 நிமிடத்திற்கு 20 நொடியாவது கண்களை வேறு பொருட்களை உற்று நோக்க வேண்டும்.
குறிப்பாக சிறு குழந்தைகள், சிறுவர்கள் கூடுமானவரை செல்போனிலும், டேப்லெட்டிலும் விளையாடுவதை தவிர்த்து பூங்காவில் சென்று நண்பர்களுடன் உற்சாகமாக விளையாடி மகிழுங்கள் அப்போது உங்கள் உடலில் வியர்வை போல, கண்ணின் வலது மற்றும் இடது புறங்களில் அமைந்துள்ள குளுமோமா சுரபி இயல்பாக சுரக்க தொடங்கும். கண் அழுத்த நோயும் நீங்கும்..! என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளை கண்ணே... மணியே... என்று கொஞ்சினால் மட்டும் போதாது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களை வழி நடத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக