திங்கள், 20 மே, 2019

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள்...


திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள்...

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும் அழைப்பர்.

அம்பாசமுத்திரம்

கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

அய்யனார் சுனை

நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

குற்றாலம்

பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

குற்றாலநாதர் கோயில்

பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான். தொலைபேசி - 04633-210138.

தோரணமலை

தோரணமலை முருகன் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கடையம் அடுத்த தோரணமலை மீதும் முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இந்த மலை பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்கி வருகிறது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த அருள்மலையான தோரணமலை, பார்ப்பதற்கு யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் அமைந்திருக்கும்.

யானை என்பதற்கு வாரணம் என்று பொருள் உண்டு. எனவே இந்த மலை வாரணமலை என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி தோரணமலை என்றாகியுள்ளது. யானை வடிவமாய் அமைந்துள்ள தோரணமலையானது குலுக்கை மலை, ஆனைமலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

தென்திசை வந்த அகத்தியர் :

இமயமலையில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண்பதற்காக முப்பது முக்கோடி தேவர்களும், உலக மக்களும் அங்கே குவிந்தனர். இதனால் இமயமலை இருக்கும் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. பூமியின் அதிர்வால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நடுங்கிப்போனார்கள்.

தங்கள் அச்சம் குறித்து சிவபெருமானிடம் அனைவரும் எடுத்துரைத்தனர். அப்போது சிவபெருமான், குறு முனிவரான அகத்திய முனிவரை அழைத்து, ‘அகத்தியா! உலகத்தை சமநிலை பெறச் செய்ய உன்னால்தான் இயலும். ஆகவே நீ இப்போதே தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்!’ என்று கூறினார்.

அகத்தியன், சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருக்குள் பெரிய வருத்தம் ஒன்று இருந்தது. அதனை ஈசனிடம் வெளிப்படுத்தவும் செய்தார். ‘ஐயனே! தங்கள் கட்டளையை மீறி நடக்க எனக்கு சக்தியில்லை.

இருப்பினும் உலகமே காண வாய்ந்திருக்கும் உங்களது திருக்கல்யாண கோலத்தை என்னால் காண இயலாமல் போகிறதே, என்பதை எண்ணி நான் மிகவும் துயரப்படுகிறேன்’ என்றார் அகத்தியர். அவரை தேற்றி ஆறுதல் படுத்திய சிவபெருமான், ‘அகத்தியா! நீ எப்போது நினைத்தாலும் நான் திருமண கோலத்தில் காட்சி தருவேன்’ என்று நல்லாசி கூறினார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்திசை நோக்கி பயணப்பட்டார் அகத்திய முனிவர். அவர் பொதிகை மலைக்கு வந்தபோது உலகம் சமநிலையை அடைந்தது. அகத்திய முனிவர் வந்த வழியெல்லாம் புனித பூமியானது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் திருக்குற்றாலம் வந்தார். அங்குள்ள மகாவிஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றியது அவர்தான். அங்கிருந்து பொதிகை மலை செல்லும் போது அவரது பாதச்சுவடுகள் பட்ட இடம்தான் தோரணமலை.

தோரணைமலையில் தங்கிய அகத்தியர் :

அகத்தியரின் மருத்துவ திறனை பயன்படுத்தி தேரையரின் சமயோசித புத்தியை வெளிப்படுத்தி சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகறிய செய்ய முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய தலம் இது. தோரணமலையில் ஒரு நாழிகை நேரம் தியானம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கிறது.

எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது. அகத்தியர் திருக்குற்றாலம் வந்தபோது அங்கு வைணவத்தலத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாளை இலஞ்சி குமாரசாமியின் அருளால் சிவபெருமானாக்கி வழிபட்டு பொதிகைமலை நோக்கி வந்தார். வரும் வழியில் வானளாவ கநுவாகன அமைப்பில் உயர்ந்து நிற்கும் தோரணமலையின் அழகில் மனம் லயித்தார்.

மூலிகை செடிகள் ஏராளமாக செழிப்புடன் வளர்ந்திருப்பதை கண்டு பூரிப்படைந்தார். சிறிது காலம் இம்மலையில் தங்கி தவம் புரியவும், சித்த மருத்துவம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பினார். அப்பொழுது தன் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மலைமீது தவமிருந்து வணங்கி வந்தார்.

மருத்துவ ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாக அவ்வையாரின் பரிந்துரையின் பேரில் பிறவி ஊமையான ராமதேவன் எனும் அந்தணன் சீடனாக இருந்து வந்தார். மருத்துவ ஆராய்ச்சியில் தனக்கு உதவியாகவும், சிகிச்சையில் சமயோசிதமாகவும் செயல்பட்ட தன் சீடன் ராமதேவனை பாராட்டிய அகத்தியர் அவரை தேரையர் என்று அழைக்க தொடங்கினார்.

தேரையரின் ஊமைத்தன்மையை நீக்கி பேச்சுத்திறனை ஏற்படுத்தினார். தனக்கு தெரிந்த மருத்துவ நுணுக்கங்களையும் தேரையருக்கு கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு பொதிகைமலைக்கு சென்று விட்டார். அவரத ஆலோசனையின்பேரில் தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்தத தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார்

தேரையர் வழிபட்ட தலம் :

இந்த மலையில் அகத்தியில் சில காலம் தங்கி இருந்துள்ளார். அவரது ஆணைக்கு இணங்க, அகத்தியரின் சீடரான தேரையர் தோரணமலையிலேயே தங்கியிருந்து தவம் இயற்றி, பல சித்துக்களை செய்துள்ளார். தனது இறுதி காலத்தில் தேரையர் இங்கேயே அடங்கியதாக வரலாறு கூறுகிறது.

தேரையரே இந்த மலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அறியப்படுகிறது.  அகத்திய முனிவர் காலடி பட்டதாலும், சித்தர் ஐக்கியமானதாலும் இந்த பூமி மகத்துவம் நிறைந்ததாக போற்றப் படுகிறது. சித்தரின் அருள் அதிர்வலைகள் இப்போதும், எப்போதும் இந்த மலையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இது தவிர்த்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட வெங்கலவன் என்ற நாயக்க மன்னன் தோரணமலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் தகவல்கள் உள்ளன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கோவில் 1928–ம் ஆண்டு மீண்டும் தோற்றம் பெற்றது.

தோரணமலை வரலாறு

1000 வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கபடிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது இதற்கிடையில் முத்துமாலைபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நா.பெருமாள் என்பவரின் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி தான் மலைமேல் உள்ள சுனையில் கிடக்கிறேன் என்றும் என்னை எடுத்து வணங்குகள் என்றும் கூறினான் .முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது.அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக காட்சியளிக்கிறது.

இதற்கு பின் ஆசிரியர் திரு.கே.ஆதிநாராயணன் (பரம்பரை அறங்காவலர்) என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகபடுத்த பல முயற்சிகள் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலேடு கட்டினார். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேடரில் சிலேடகா காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை .அதை பார்த்து பல பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர் முருகபெருமானை வணங்க ஆரம்பித்தனர்.இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும் அந்த வகையில் தோரனமலையும் தனிச்சிறப்பு பெற்றது.

தோரணமலைக்கு தென்புறம் ராமநதி மலையில் இருந்து பாய்ந்து வருகிறது,மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும்தோரனமாலைக்கு மாலையிட்டது போல்காணபப்டுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நாம் அறியாமல் உடல் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.அங்கெல்லாம் பலசித்தர்கள் அரூபமாக வாழ்ந்துதான் வருகிறார்கள்

இங்குள்ள 64 சுனைகளில் தேடிச் சென்று பார்த்தால் தெரியும் ஆனால் கைக்கு எட்டவில்லை.அதோடு மட்டுமல்லாமல் இந்த சுனைகள் எல்லாம் சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாகத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள்.அடிவாரத்தில் வல்லப விநாயகர்,கன்னிமார் அம்மன், வியாழ பகவான்,நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் சுனைகளும் சுதையாலான சிவபெருமான்,சரஸ்வதி,மகாலெட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. அருகே அரசமரத்தடியில் சப்த கன்னியர் வீற்றிருக்க மரத்தில் வளையல்களும், தொட்டில்களும் பிராத்தனைக்காக கட்டப்பட்டுள்ளன.

மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் சுதியாலான பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்க முடியாதவர்கள் கீழே இவரை தரிசித்து அருள் பெறலாம். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும்ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது அப்டியல்ல படிக்கட்டு வழியாக நன்றாக ஏறிச்செல்லலாம். வழியில் இரண்டு மொட்டை பாறைகள் உள்ளது அங்கு படிக்கட்டுகளைப் பிடித்து ஏற வசதியாக கம்பிகளும் உள்ளன. அந்த வழியில் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.

இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்று நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூடங்களையும், புறப்பட்டு வரும் கடனா, ராம, ஜம்பு நதிகளை ரசித்துக்கொண்டேஉச்சியை அடையலாம்.மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான்.

இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பாதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனை புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படும். மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்தநொடியிலேயே உணரலாம்.

அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு பொந்து ஒன்று உள்ளது. அது சாதாரண பொந்து அல்ல அதுவும் ஒரு சுனை தான் அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைபூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வழிபாடுகள்

பலன் தரும் வழிபாடுகள்..

சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.

திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.

மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.

தொடர்பு கொள்ள
தகவல் அறிய :

9965762002 (கே.ஏ.செண்பகராமன்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில் பற்றிய விவரங்களை அறியலாம்..

மாவட்ட அறிவியல் மையம்

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு கடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் . அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் எனினும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.

கிருஷ்ணாபுரம்

நெல்லையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் இது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.

மாஞ்சோலை

நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

குறுக்குத்துறை முருகன் கோயில்

தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகன் கோயில் கொண்டிருக்கும் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நாங்குநரி

நெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் பேதமின்றி கூடிவாழும் அழகிய ஊர்.

மணிமுத்தாறு அணை

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது. அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது.

கழுகுமலை

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

முருகன் கோயில்

முருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.

அருங்காட்சியகம்

நெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது ஒரு பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியகமாகும். அனுமதி இலவசம்.

பாபநாசம்

பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இது பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. பாபநாசம் நீர்வீழ்ச்சி இதன் அருகில்தான் உள்ளது. நெல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்பி மலை

ஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். இந்தக் குன்றில் நம்பியாண்டவர் குடி கொண்டுள்ளார். மலை நம்பி என்றும் இவரை அழைக்கிறார்கள். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

பத்தமடை

மென்மையான கைக்குள் சுருட்டும் அளவு நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது. சுவாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.

சாலைக் குமரன் கோயில்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இந்தக் கோயில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்காக 1965 இல் வெற்றி விருது பெற்றது.

கும்பருட்டி அருவி

குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.

பொட்டல் புதூர் தர்கா

1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான தர்கா. இந்தத் தர்காவின் கட்டட அமைப்பு இந்திய கட்டடக் கலையைச் சார்ந்தது. இங்கு நடக்கும் வழிபாடும்கூட இந்துக்களின் சாயலை ஒத்ததாகவே இருக்கும். இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். தொலைபேசி - 04634-240566.


நெல்லையப்பர் - காந்திமதி கோயில்

நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும்தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள். தொலைபேசி - 0462 - 2339910.

சங்கரன் கோயில்

சிவனும், பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணர் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு. நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். தொலைபேசி - 04636-222265.

முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதன் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது. தொலைபேசி - 04364-250594.

தென்காசி - காசி விஸ்வநாதர் கோயில்

வடநாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் இது தென்னாட்டில் உள்ள காசி. தென்காசி பேருந்து நிலையம் அருகில்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோயிலின் நீளம் 554 அடி அகலம் 318 அடி. இதன் பிரமாண்டமான கோபுரத்தை 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். 1924 ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோபுரம் தகர்ந்து விழுந்தது. சமீபத்தில் 168 அடி உயரத்தில் மீண்டும் அந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் 1927 ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. தொலைபேசி - 04633-222373.

திருக்குறுங்குடி

மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். புராணங்களில் நாராயணன் வந்து இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்

திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 1826 ஆம் ஆண்டு ரெவரன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருவிடைமருதூர்

நெல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்கு அதலநாதர் மற்றும் நாறும்பூநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாது விஜயநகரப் பேரரசின் கட்டுமான சிற்பக் கலைகளையும் பிரதிபலிக்கும் சாட்சியாக இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக