கிராமத்துத் திண்ணை வீடு
மறந்து விட்ட மரபின் அடையாளச் சின்னம்
திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்க முடியாது முன்னொரு காலத்தில்
அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை.
வீடு கட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம் வீட்டின் முன் கட்டி இருப்பர்.
திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும்.
இது வீட்டின் முன் பகுதியில் அல்லது தலைவாசல் பகுதியில் திறந்த வெளியில் அமைந்திருக்கும்.
சுவற்றில் சாய்ந்தும், காலைத் தொங்க விடுவதற்கும் வசதியான அமைப்பாக அமைத்திருப்பர்.
இதில் இருக்கும் தூண்கள் வீட்டைத் தாங்கிக் கொண்டு இருக்கும்.
திண்ணையில் உட்கார்ந்து ஊர்க் கதை பேசுவதும் வீட்டுக்கு வரும் உறவினர்கள் அங்கு உட்கார்ந்து ஊர்க்காரர்களோடு அளவாடுவதும்,
பள்ளிப்பாடங்களை சிறுவர்கள் அங்கு உட்கார்ந்து படிப்பதற்கும், வீட்டுப் பஞ்சாயத்து, ஊர்ப் பஞ்சாயத்து என ஒவ்வொரு திண்ணைகளும் அந்த காலக் கதையை சொல்லும்..
தங்களது அனுபவங்களைப் பகிரும் இடமாக இருந்த திண்ணை இன்று இல்லாமலே போய் விட்டது..
திண்ணை கட்டும் இடத்தில் ஒரு 4 க்கு 4 அறை கட்டி வாடகைக்கு விடும் காலம் இந்தக் காலம்...
கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம் வடியுது;
அண்ணன் எப்பப் போவான் திண்ணை எப்ப காலியாகும்...’’ கிராமங்களில் புழங்கும் இந்த சொலவடையே திண்ணைகளின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.
ஆனால், இன்று அண்ணன்களுடன் சேர்ந்து திண்ணைகளே காலியாகி விட்டது என்பது தான் ஒரு வரலாற்றுச் சோகம்.
அன்று எல்லா வீடுகளிலும் திண்ணைகள் இருந்தன. வெளித்திண்ணை, உள் திண்ணை, வாசல் திண்ணை, சுற்றுத்திண்ணை, உயரத்திண்ணை, அகலத்திண்னை, திண்டுத்திண்ணை,
கல் திண்ணை, புறக்கடைத் திண்ணை என்று பல திண்ணைகள் வீட்டில் இருந்தன.
எல்லா நேரமும் எல்லாத் திண்ணைகளும் ஏதோ ஒரு சேதியை சொல்லிக் கொண்டு தான் இருந்தன.
அதில் அமர்ந்து தான் பாட்டிகள், பேரன் பேத்திகளுக்கு கதைகள் சொன்னார்கள்.
இளசுகள் பல்லாங்குழி விளையாடினார்கள், பரமபதம் ஆடினார்கள்,
அப்பாக்கள் அரசியல் பேசினார்கள்,
புறக்கடைத் திண்ணையில் அமர்ந்து புது மணத்தம்பதியர் நிலாவை ரசித்தார்கள்.
எதிர் திண்ணைகளில் காதல் வளர்ந்தது.
பஜனைகள், பக்தி பாடல்கள், கதாகாலஷேபங்கள், கச்சேரிகள் என்று விசேஷ நாட்களின் கலை மேடைகளாக திகழ்ந்ததும் இந்த திண்ணைகள் தான்.
நாட்டு வைத்தியர்களின் மருத்துவமனையும், மருந்துக்கடையும் அவர் வீட்டுத் திண்ணைகளில் தான்.
வளையல், ஜவுளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று பலவித பொருட்களைக் கூவிக் கூவி விற்று வரும் தலைச்சுமை வியாபாரிகள், சுமையை இறக்கி வைத்து திடீர்க் கடை விரிப்பதும்
திண்ணைகளில் தான்.
நமது ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு அங்கமாக இருந்த இந்த திண்ணைகள் இன்று நவீன நாகரிகம், வாஸ்து என்ற பலவேறு காரணங்களால் காணாமல் போய் விட்டன. வெளித் திண்ணைகளின் இடத்தைப் பிளாஸ்டிக் சேர்களும்,
உள் திண்ணைகளின் இடத்தை ஷோபா செட்களும் பிடித்து விட்டன.
வீடுகளில் திண்ணைகள் அரிதாகி விட்டதாலோ என்னவோ அனைவரையும் உற்ற சொந்தங்களாகப் போற்றும் மனப்பாங்கும் மக்கள் மத்தியில் குறுகி விட்டது
பளப் பள’ பள்ளிக்கூடங்கள், ‘கலர்புல்’ கல்லூரிகள் பல இன்று கணக்கில்லாமல் பெருகியுள்ளது.
குளுகுளு வகுப்பறைகளிலும், குஷன்பஞ்சு இருக்கைகளிலும் வசதியாக உட்கார்ந்து அசதி இல்லாமல் படிக்கின்றனர் இன்றைய மாணவர்கள்.
ஆனால், அந்தக் காலங்களில் அப்படிப்பட்ட வகுப்பறைகள் இல்லை. இருந்தது எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மட்டும் தான்.
பாதக்கிண்ணம் காப்புப் பிடிக்க சம்மணம் போட்டு உட்கார்ந்து தான் குழந்தைகள் பயில வேண்டும்.
மேசையும் இல்லை, நாற்காலியும் இல்லை. திண்ணை தான் அன்றைய மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் இடமாக இருந்தது.
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக