சனி, 15 ஜூன், 2019

தந்தையை வணங்குவோம்: இன்று தந்தையர் தினம்


தந்தையை வணங்குவோம்: இன்று தந்தையர் தினம்

பத்து மாதங்கள் தாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய்  இருந்து சந்தோஷமும், பெருமையும் தருபவர் தந்தை. வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம்  தந்தை. ‘நான் பட்ட கஷ்டம்’, என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. இத்தகைய சிறப்பு மிக்க தந்தையை வாழ்த்த  இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட  பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகள் தந்தையை மதிக்க கற்றுத் தருவதே  இத்தினத்தின் நோக்கம்.

அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார்.  அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை  வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடும் சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான், தந்தையர் தினம்  கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.  1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார்.  பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை  வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தனது பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே தன் குழந்தைகளுக்காக  ராத்தூக்கம், பகல் தூக்கம் இன்றி பல தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்களை நாம் போற்ற வேண்டும்.

இன்றைய அவசர உலகில் நாம், நம் தந்தையருக்கு தள்ளாத வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா என்ற கேள்வியை நம்முள்  நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற்பணியாகும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல... என்றுமே  தந்தையருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மனதில் இருத்திக் கொள்வோம். இந்நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு  வாழ்த்துவோம்! வணங்குவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக