ஞாயிறு, 30 டிசம்பர், 2018

உலகத்திலே 'வருடப் பிறப்பு' என்று சொல்லிக்கொண்டு ஆயிக்கணக்கான புதிய ஆண்டுகள் வருடம் பூராவும் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன


உலகெங்கும் எல்லோருமே ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக் கூறி பரிமாறிக்கொள்வது மிகவும் வழக்கமாகிவிட்ட்து. புத்தாண்டின் முதல் நாளிலேயே வாழ்த்துப்பட்டால், அந்த ஆண்டு முழுவதும் சீரும், சிறப்பும், சௌக்கியமும், செல்வமும் நிறைந்த சந்தோசமான பெரு வாழ்வு கிடைக்கும் என்று அநேகமானவர்கள் முழு மனதுடன் நம்புகின்றார்கள்.

பிரச்சனை என்னவென்றால், வாழ்த்துபவரும், வாழ்த்துப்படுபவரும் எந்தப் புத்தாண்டைப் பற்றிக் கதைக்கின்றார்கள் என்றுதான் கேள்வியாய் இருக்கின்றது. உலகத்திலே 'வருடப் பிறப்பு' என்று சொல்லிக்கொண்டு ஆயிக்கணக்கான புதிய ஆண்டுகள் வருடம் பூராவும் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.

பல்வேறு இன மக்களும் தாங்கள் சொல்லும் வருடப்பிறப்புதான் உண்மையானது என்று சொல்லிக்கொண்டு அந்நாளில் பெரும் நன்மைகள் வேண்டிப் பல வழிபாடுகளை செய்துகொள்ளுவார்கள். ஒரு சிலர், மேலதிக பலன்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற சிறு நப்பாசையில் பக்கத்து வீட்டு புத்தாண்டையும் இழுத்துக் கொண்டாடி, புறச் சமய கடவுள்களிடமும் விண்ணப்பம் இட்டு வைப்பார்கள்.

உலகத்திலே பல இனங்களும் ஒரு குறிப்பிடட நாளில் இல்லாது, மாறி வரும் நாட்களில் தங்கள் புது வருடங்களைக் கொண்டாடுகின்றார்கள். அநேகமாக சூரிய, சந்திர, நட்சத்திர  இராசி மாற்றங்களை அடிப்படையாய்க் கொண்டு வருட முதல் நாளை நிர்ணயம் செய்கின்றார்கள்.

இதன்படி வருடம் பிறப்பது:

தமிழ்/சிங்களம்/சில வட இந்திய மாநிலங்கள் ++: ஏப்ரல் 13 -15
(தமிழ்: தைப்பொங்கல், திருவள்ளுவர் என்றும் வாதிடுவர்)
தெலுங்கு/கன்னடம் ++: மார்ச்/ ஏப்ரல்
சீனா/கொரியா/ வியட்நாம் ++: ஜனவரி 21  - பெப்ரவரி 21
மிஸ்ஓ மாநிலம்: பெப்ருவரி
முஸ்லிம்: மாறிக்கொள்ளும்.

இப்படியாக எண்ணற்ற வருடப் பிறப்புகள் இதர ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க நாடுகள் எங்கும் உள்ளன.

புத்தாண்டு முதல் நாளில் வாழ்த்தினால், வழிபட்டால் நல்லது நடக்கும் என்று இருந்தால் யாருக்குத்தான் உதவி செய்வது என்று இறைவனுக்கே குழப்பம் வந்துவிடும். ஒவ்வொரு பிரிவினர்களும் தங்கள் தங்கள் சமயமும், கடவுளும்தான் உண்மையானது என்று சாதிப்பதுபோல, தங்கள் வருடம்தான் சரியான வருடம் என்றும், அதன் முதல் தினமே நலன் தரும் வருடப் பிறப்பு என்று அந்த நாளில் வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் செய்து கொள்வார்கள்.

ஒவ்வொரு வருட முதல் திகதியிலும் அப்படி என்னதான் விஷேஷம் இருக்கும் என்று ஒன்றுமே புரியவில்லை. இந்த இலக்கங்கள், கிழமைகள், மாதங்கள், வருடங்கள் எல்லாம் தன்னிச்சையாக மனிதனால் எமது வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட்து. பூமியின் சுற்றலையும், சுழற்சியையும் வைத்து 'வருடம்' என்றும், 'மாசம்' என்றும், 'கிழமை' என்றும் வகுத்துக்கொண்டான். முதலாவது நாள் என்று சும்மா ஒரு தோராயமாகவே வைக்கப்பட்ட்து.

உதாரணமாக, ஒரு புதிய பாடசாலையை எடுத்துக்கொண்டால், அதில் சேரும் பிள்ளைகளுக்கு அடையாள இலக்கமாக  1 , 2 , 3 . . 1000 .. என்று பதிவு செய்து வைத்திட்டுள்ளார்கள் என்று வைப்போம். அப்பிள்ளைகளில், இல. 1  உள்ள மாணவன் எல்லாவிதத்திலும் உயர்ந்தவனாகவோ, 13 , 888 இலக்க மாணவர்கள் இழிவு கொண்டவர்களாகவோ  என்று எடுத்துக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்? அதேபோலத்தான் இந்தக் கலண்டர் விவகாரமும்!

மனிதனால் அன்றாட கடமைகளை முறைப்படி செய்துகொள்வதற்காக வடிவமைக்கப்பட்டு, உலகம் முழுவதும்  பொதுவாக கடைப்பிடிக்கப்படும் ஒரு கலண்டர் தான் நாம் இப்பொழுது பின்பற்றும் கிரெகோரியன் முறைக் கலண்டராகும்.

இக்கலண்டரில், வருடம் ஒன்றுக்கு இதுதான் முதலாவது மாதம், இதுதான் முதலாவது திகதி என்று மனிதன் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு, ஏதோ கலண்டரில் முதல் காணும் அந்தத் தினம்தான் அம்முழு வருடத்திற்கான மூலாதார வேர் என்று சொல்லிக்கொண்டு அவசியமற்ற பயத்துடனும், பதட்டத்துடனும் பலத்த எதிர்பார்ப்புகளை நோக்கி ஆவல் கொண்டலைவது ஏன்தான் என்று தெரியாது.

வாழ்த்தியவரும், வாழ்த்துப்படடவரும், பூசை செய்தவரும், மத குருவும் அவ்வாறு செய்த மறுநாளே பலத்த கஷ்டங்களுக்கு உள்ளாவது இல்லையா?

உண்மையில், மனிதன் தன்னை சமூகப் பிணைப்பில் வைத்திருக்கும் இதுபோன்ற ஒன்றுகூடல் நிகழ்வுகளில்  பல விடயங்களை நாளாந்தம் செய்து திருப்தி அடைவதனால், அதன்பால் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையும், சந்தோஷமும்தான் அவனை நேரலைச் சக்தியினுள் இட்டுச்சென்று,  உளவியல் ரீதியாக மன அழுத்தம் அற்ற  ஒரு வாழ்வை அடையத் தூண்டுகோலாய் இருக்கின்றது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக