சேலம் ‘சின்னப்பம்பட்டி' டூ ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்'... டி.நடராஜன் .
ரூ.3 கோடிக்கு ஏலம்... சேலம் ‘சின்னப்பம்பட்டி' டூ ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்'... யார் இந்த நடராஜன்
இன்று காலை 11 மணி வரை நடராஜன் (t.natarajan) என்ற பெயரை யாரும் கூகுளில் தேடவில்லை. ஆனால் 11.30 மணிக்கு இந்தியாவே தேடியது இந்த பெயரைத் தான். யார் இவர்? என்ன சாதித்திருக்கிறார்? இன்றைய தினம் ஐ.பி.எல் 2017 சீஸனுக்கான ஏலம் நடந்தது. இதில் அதிக தொகைக்கு ஏலம் போன இரண்டாவது இந்திய வீரர் சேலம் நடராஜன்.
யார் இந்த நடராஜன்
இர்பான் பதான், இஷாந்த் ஷர்மா போன்ற சீனியர் வீரர்களையே ஏலத்தில் எந்த அணியும் சீண்டவில்லை. ஆனால் டி.நடராஜன் என்ற பெயரை அறிவித்ததும் அத்தனை அணி உரிமையாளர்களும் பரபரப்பானார்கள். புனே, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளின் உரிமையாளர்கள் போட்டிபோட்டு, இவரை எப்படியாவது அணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்தார்கள். பத்து லட்ச ரூபாய் என்பது இவருக்கான அடிப்படை விலை.
புனே அணிதான் முதலில் இவரை ஏலத்தில் எடுக்க முயற்சித்தது. ஆனால் அதன் பின்னர் ஏலத்தொகை அதிகரித்துக்கொண்டே செல்ல, அந்த அணி உரிமையாளர்கள் பின்வாங்கினார்கள். பஞ்சாப் அணி இவரை எப்படியாவது வாங்க வேண்டும் என துடித்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் ஏலத்தொகையை அதிகரித்து கேட்டுக் கொண்டே இருந்தார் பஞ்சாப் அணி சார்பாக வந்திருந்த வீரேந்திர ஷேவாக். முடிவில் பஞ்சாப் அணி இவரை மூன்று கோடி ரூபாய்க்கு எடுத்திருக்கிறது.
டி.நடராஜன
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) முதல் சீசனை நீங்கள் உன்னிப்பாக கவனித்திருந்தால், நடராஜன் பற்றி ‘இன்ட்ரோ’ தேவையில்லை. ஒல்லியான தேகம், அலட்சிய வேகம், துல்லியமான யார்க்கர். இது தான் அவரது அடையாளம். தமிழ்நாட்டில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாவது மிகவும் அரிது. சுழற்பந்தின் சொர்க்கபுரியான தமிழகத்தில் இருந்து வேகப்பந்தை வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் நடராஜன். அதிலும் அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர்.
சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இன்று இந்தியா முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை விதைத்திருக்கிறார். வாழ்த்துகள் சொல்லிப் பேசினேன்.
``சேலத்தில் இருக்கிற சின்னப்பம்பட்டி என்கிற கிராமம்தான் என்னோட சொந்த ஊர், உயிர் எல்லாமே! கிரிக்கெட் சின்ன வயசுல இருந்து பிடிக்கும். டிவியில் பார்க்கிறதை விட எனக்கு விளையாடத்தான் பிடிக்கும். பசங்க கூட சேர்ந்துக்கிட்டு டென்னிஸ் பால்லதான் விளையாடிகிட்டு திரிஞ்சேன். இப்போ ஐ.பி.எல் வரைக்கு வருவேன்னு நினைச்சதே இல்லை. அப்பா கூலி வேலை பாக்கிறாங்க. அம்மா சாந்தா ரோட்டோரத்தில் தள்ளுவண்டில சிக்கன் விக்கிறாங்க. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு தம்பி. சின்ன வயசுல ‘இவன் என்னடா எப்பப் பார்த்தாலும் கிரிக்கெட்டு, கிரிக்கெட்டுன்னு சுத்துறான்’னு திட்டுனாங்க. ஆனா அதுக்கப்புறம் எனக்கு இதுதான் வருதுன்னு தெரிஞ்சவுடனே ‘நீயாச்சும் நல்லா இரு’ன்னு வாழ்த்தி அனுப்பினாங்க.
சேலத்திலேயே ஒரு காலேஜ்ல டிகிரி வாங்கிட்டேன். ஆனா அதுக்கப்புறம் ஏதோ ஒரு வேலைக்கு போறதில விருப்பம் இல்ல . காலேஜ் டைம்ல படிச்சதை விட கிரிக்கெட் விளையாடின நேரம்தான் அதிகம். எங்க கிராமத்துல இருக்க எல்லாருக்கும் என்னை நல்லாவே தெரியும். டென்னிஸ் பால்ல வேகமா பந்துவீசுவேன். அப்படியே விளையாடிகிட்டு திரிஞ்சப்பதான் சென்னைல மேட்ச் எல்லாம் விளையாடலாம்லன்னு நிறைய பேர் அட்வைஸ் பண்ணாங்க. அதுல ரொம்ப முக்கியமானவர் ஜெயபிரகாஷ் அண்ணா. அவருக்கும் எனக்கும் எந்த ரத்த சம்பந்தமும் கிடையாது. அவர் கூட ஊர்ல கிரிக்கெட் விளையாடிருக்கேன். அவ்ளோ தான் பழக்கம். என்னோட திறமையைப் பாத்து ஊக்குவிச்சதே அவர் தான். கிரிக்கெட் கிட்லாம் வாங்குறதுக்கு பெரிய வசதி எல்லாம் கிடையாது. ஆனா இதுவரைக்கும் எனக்கு எல்லா உதவியும் அவர்தான் பண்ணிருக்கார்.
நான் ஸ்கூல், காலேஜ்ல எந்த டீம்லயும் இருந்தது கிடையாது. முறையான கிரிக்கெட் கிரவுண்ட்ல விளையாடியதும் இல்ல. 20 வயசுக்கு அப்புறம்தான் முதன்முறையாக கிரிக்கெட் கிரவுண்ட்லயே கால் வச்சேன். சென்னைல ‘விஜய் கிரிக்கெட் கிளப்’, ‘ஜாலி ரோவர்ஸ் கிளப்’ இரண்டுக்கும் ஆடியிருக்கேன். டிவிஷன் கிரிக்கெட் விளையாடியதுல இருந்தே மாநில அணிக்கு ‘செலெக்ட்’ ஆயிட்டேன். ரஞ்சிக்கு ‘செலெக்ட்’ ஆயிருக்கேன்னு தெரிஞ்சப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நம்ம வாழ்க்கை நல்லாயிரும்னு தோணுச்சு. 2014 - 2015 சீஸன்ல ஒரே ஒரு மேட்ச் தான் ஆட முடிஞ்சது. அப்போ என்னோட பந்து வீசும் முறை விதிகளுக்கு மாறா இருக்கிறதா சொல்லி என்னை தடை பண்ணிட்டாங்க. ரொம்ப உடைஞ்சு போயிட்டேன். ஏன்னா அதுவரைக்கு யாரும் என்னோட பந்துவீச்சு முறையை விமர்சிச்சதேயில்ல. தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA)அகாடமி சுனில் சுப்பிரமணியம் சார் தான், அப்போ எனக்கு நம்பிக்கை கொடுத்தார். ரொம்ப பிரயத்தனப்பட்டு என் பவுலிங் ஸ்டைலையே மாத்தினேன்.
டி.நடராஜன்
வேகப்பந்து வீசுறதுல திடீர்ன்னு ஸ்டைலை மாத்தினா, ஆரம்பத்துல நாம் நினைக்கிற விதமான பந்துகளை வீச முடியாது. மீறி முயற்சி செஞ்சா கை, தோள்பட்டை வலிக்கும். கிரிக்கெட்தான் என் வாழ்க்கைனு முடிவு செஞ்சபிறகு இந்த சோதனைகளை எல்லாம் தாங்கிக்கனும்னு மனதை திடப்படுத்திக்கிட்டேன். டெக்னீக்கலா நிறைய கத்துக்கிட்டு மாத்தினேன். தமிழ்நாட்டோட கோச் பாலாஜி அண்ணா நிறைய உதவி பண்ணார். ஒரு ரஞ்சி சீஸன் மிஸ்ஸானாலும் அடுத்த சீஸனுக்குள்ள சரி பண்ணனும்னு முயற்சி செஞ்சு மாத்திட்டேன். கடந்த ரஞ்சி சீஸன், டி.என்.பி.எல் இது ரெண்டும் எனக்கு அடையாளம் தந்திருக்கு. இப்போ ஐ.பி.எல்-ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சார்" என பெருமிதப் புன்னகையோடு சொன்னார்.
பொதுவாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். இவர் இருபது வயதுக்கு மேல் தான் முறையான கிரிக்கெட்டே ஆட ஆரம்பித்திருக்கிறார். 'எப்படி பாஸ்... காயங்களை சமாளிச்சீங்க?' எனக் கேட்ட போது "எனக்கு இதுவரை பெரிய அளவில் காயங்களே ஏற்பட்டதில்லை, அப்பப்ப சின்ன சின்ன காயங்கள் வரும், அது எல்லாம் இரண்டு மூணு நாள்லயோ ஒரு வாரத்துக்குள்ளயோ சரி ஆகிடும்" என்கிறார்.
நடராஜனின் பெரும் பலமே ‘யார்க்கர்’ தான். துல்லியமாக இவர் வீசும் யார்க்கரில் பேட்ஸ்மேன்கள் பெரிய ‘ஷாட்’ ஆடுவது கடினம். டி.என்.பி.எல் தொடரில் அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணிக்கு இவர் ஆடினார். தூத்துக்குடிக்கு எதிரான ஒரு போட்டியில் சூப்பர் ஓவரில் இவர் அபாரமாக பந்து வீசினார். அந்த ஒரு ஓவர் தான் இன்று இவரை மூன்று கோடி வரை ஏலத்தில் எடுக்க முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. சுமார் 135 கி.மீ வேகம் வரையில் வீசும் வேகப்பந்து வீச்சாளராக மிளிர்வதால் இவருக்கு இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
கிரிக்கெட்டில் யார் ரோல் மாடல் என்ற வழக்கமான கேள்வியை முன் வைத்தேன். "யாரும் ரோல் மாடல் எல்லாம் இல்ல சார். ஆஸ்திரேலியாவோட மிச்செல் ஜான்சன் ரொம்ப புடிக்கும். அவரைப் பார்த்தா டிப்ஸ் கேட்கலாம்னு இருக்கேன் " என்கிறார்.
வீட்ல என்ன சொன்னாங்க?
"காலைல செலெக்ட் ஆனதுல இருந்து வரிசையாக போன் கால் வந்துட்டே இருக்கு. அப்பா வேலைக்கு போயிருக்கார். அம்மாகிட்ட இனிமேல்தான் சொல்லணும். சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கனு தெரில, ஆனா மூணு தங்கச்சிங்க, தம்பி, அம்மா, அப்பா எல்லாரையும் இனிமேல் நல்லா பாத்துக்குற அளவுக்கு வளர்வேன்னு நம்பிக்கை இருக்கு" எனச் சொன்னபோது அவரது குரலில் தன்னம்பிக்கை தெறிக்கிறது.
ஹாசிம் ஆம்லா, மார்ஷ், குப்தில், மாக்ஸ்வெல், மில்லர் , ஸ்டாய்னிஸ்,மோர்கன் என அதிரடி வீரர்கள் நிறைந்த அணியில் இவரும் விளையாடப் போகிறார். கிரிக்கெட் உலகின் கவனமெல்லாம் இப்போது இவர் மீது திரும்பியிருக்கிறது. எப்படி பந்து வீசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஐ.பி.எல் மட்டுமல்லாமல் வருங்காலத்தில் இந்திய அணியிலும் சேர்ந்து தேசத்துக்கு பெருமைச் சேர்க்க தமிழ்நாடு அன்போடு வாழ்த்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக