வெள்ளி, 14 செப்டம்பர், 2018

இந்தியாவில் விதவைகளின் வாழ்க்கை - தொடரும் கொடுமைகளும், கொடூரங்களும்!


இந்தியாவில் விதவைகளின் வாழ்க்கை - தொடரும் கொடுமைகளும், கொடூரங்களும்!

கணவனை இழப்பது துக்கம் என்றால், அதைவிட பெரும் துக்கம் இந்தியாவில் விதவையாக வாழ்வது. ஆண்கள் மறுமணம் செய்துக் கொள்ளலாம், ஆனால், பெண்கள் செய்துக் கொள்ள இயலாது.


இன்றைய சமூகத்தில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன என்று நாம் கூறினாலும்.. இன்றும் கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்துக் கொண்டால், அவரை ஒரு தவறான கண்ணோட்டத்தில் காணும் பழக்கம் நீடித்து வருகிறது என்பது கசப்பான நிதர்சனம்.


 #1

இன்னுமா இப்படியான வழக்கம் பின்பற்றப்படுகிறது என்று நீங்கள் கருதலாம். தமிழகத்தில் இந்த வழக்கம் குறைந்து காணப்பட்டாலும் ஒட்டுமொத்த இந்தியா என்று எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் இன்னும் இந்தியாவின் பல மாநிலங்களில், பலபகுதிகளில் கணவனை இழந்த பெண்கள் வெள்ளை புடவை தான் உடுத்த வேண்டும் என்ற கட்டாயம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


 #2

இன்னும் சில பகுதிகளில், கணவனை இழந்த பெண்களை வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்கும் பழக்கம் காணப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் இயல்பான வாழ்க்கை வாழ இயலாது. அவர்களை வீட்டில் இருந்து ஒதுக்குகிறார்கள். சிலர் எங்காவது ஒரு ஆசிரமத்தில் கொண்டு போய் சேர்க்கப்படுகிறார்கள். வட இந்தியாவில் விதவை பெண்கள் வாழ / தங்குவதற்கு என்றே சில ஆசிரமங்கள் இருக்கின்றன. உத்திர பிரதேசத்தின் விருந்தாவன் (Vrindavan) என்ற டவுன் பகுதியில் இதை சர்வ சாதாரணமாக காண இயலும்.


 #3

1856ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துக் கொள்ளலாம் என்ற சட்டம் கொண்டுவந்தது. ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் கடந்து வந்த பிறகும், இன்றும் சமூகத்தில் விதவை பெண்களை திருமணம் செய்வது என்பது தவறான பார்வையிலும், செய்யக் கூடாத விஷயமாகவும் தான் காணப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் தங்கள் அன்றாக வாழ்க்கையை நகர்த்த இன்னமும் இந்தியாவில் கஷட்டப்பட்டு வருகிறார்கள்.


 #4

இன்னமும், இந்தியாவின் சில பகுதிகளில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. கணவனை இழந்த பெண், தாலி, குங்குமம், நகை அணிய கூடாது என்பதை தாண்டி, அவர்கள் கூந்தல் கூட வளர்த்துக் கொள்ள கூடாது என்ற சடங்குகள் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக மீண்டும் நாம் உத்திர பிரதேசத்தின் விருந்தாவன் டவுன் பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.


 #5

உடை, அணிகலன், அலங்காரம் என்பதுமட்டுமல்ல, இந்தியாவின் சில பகுதிகளில் கணவனை இழந்த விதவை பெண்கள் சில உணவுகளை கூட சேர்த்துக் கொள்ள கூடாது. ஆம், மசாலா, வெங்காயம், பூண்டு போன்ற சில உணவுகளை விதவை பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என தடை செய்து வைத்திருக்கிறார்கள். இது மத கோட்பாடு என்ற கண்ணோட்டத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.


 #6

விருந்தாவன் பகுதியில் வாழும் விதவை பெண்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அவர்களை தனிமைப்படுத்தி, சிறைவாசம் போன்ற வாழ்க்கையை வாழ வைக்கிறார்கள். அவர்களால் பிற மனிதர்களை போல சகஜமாக அனைவருடனும் பேசி, மகிழ்ந்திருக்க இயலாது. யாரையும் சந்திக்க இயலாது.


இன்னும் இப்படியான வாழ்க்கை முறை இருக்கிறதா என வியக்கலாம்... இருக்கிறது.. இந்தியா இன்னமும் வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கிறது, முழுமையாக வளர வில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளும் ஒருவகையில் காரணாமாக இருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக